தமிழ்நாடு

தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!

தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!
18,000 police deployed in Chennai
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும், வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், இந்தப் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதிகக் கூட்டம் நிறைந்த பகுதிகளில் சிறப்பு கவனம்

இதுகுறித்து பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்னையில் அதிகமாகக் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துத் தரும் வகையிலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

18,000 போலீஸாருடன் தொழில்நுட்பக் கண்காணிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், குற்றத் தடுப்பு முறைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் எனச் சுமார் 18,000 போலீஸார் மூன்று பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தி.நகரில் 8, வண்ணாரப்பேட்டையில் 2, கீழ்ப்பாக்கத்தில் 4 மற்றும் பூக்கடையில் 2 என மொத்தம் 16 தற்காலிகக் கண்காணிப்புக் கோபுரங்கள் (Watch Towers) அமைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும் பைனாகுலர் மூலமும் குற்றச் செயல்கள் நடவாமல் கண்காணித்து வருகின்றனர். மேலும், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் மொத்தம் 4 தற்காலிகக் காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டத்தைக் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் பகுதியில் 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பழைய குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக Face Recognition System (FRS) என்ற செல்போன் செயலி மூலமும் போலீஸார் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதிகளில் அகன்ற LED திரைகள் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு இடங்களிலும், காவல் ஆளிநர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் திருட்டுச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

பொருட்கள வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க, கழுத்தில் துணிகளைச் சுற்றிக் கவசமாக (Scarf) கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.