தமிழ்நாடு

சென்னையில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு.. காவல்துறை தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2,005 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு.. காவல்துறை தகவல்!
2,005 Ganesh idols were immersed in Chennai
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2,005 விநாயகர் சிலைகள், நேற்று (ஆகஸ்ட் 31) காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டன.

விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் கரைப்பு நிகழ்வுகளுக்காகச் சென்னை காவல்துறை, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் மொத்தம் 1,519 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

சிலை ஊர்வலங்கள் மற்றும் கரைக்கும் இடங்களில், சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, அதிவிரைவுப் படை, தமிழ்நாடு சிறப்புப் படை என 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கரைப்புப் பணிக்காக மாநகராட்சியின் உதவியுடன் 2 ராட்சத கிரேன்கள் உட்பட மொத்தம் 8 கிரேன்கள், 8 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராலிகள் பயன்படுத்தப்பட்டன.

கண்காணிப்புக்காக 8 கண்காணிப்பு கோபுரங்கள், 54 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 13 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அவசர உதவிக்கு 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில், மீட்பு பணிக்காகக் கடலோர பாதுகாப்புப் படையினரின் 2 கப்பல்கள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்களுடன் கூடிய படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

2,005 சிலைகள் கரைப்பு

நேற்று இரவு 09.00 மணி வரையிலான கணக்குப்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,362 சிலைகளும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 408 சிலைகளும், ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 235 சிலைகளும் என மொத்தம் 2,005 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.