தமிழ்நாடு

கோவைக்கு 30 மினி பஸ்கள்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

கோவை மாவட்டத்தில் உள்ள 30 வழித் தடங்களில் 30 மினி பஸ்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

கோவைக்கு 30 மினி பஸ்கள்..  டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
30 mini buses to Coimbatore
தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை தொடக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித் தடம் என மொத்தம் 30 வழித் தடத்தில் மினி பஸ் சேவை தொடக்க விழா காந்திபுரம் ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இத்திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை அடுத்து, கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் ஆகியோர் இச்சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 8 மினி பஸ், கோவை வடக்கில் 4 மினி பஸ், கோவை மேற்கில் 15 மினி பஸ், கோவை தெற்கில் 1 மினி பஸ், பொள்ளாச்சியில் 2 மினி பஸ் என மொத்தம் 30 மினி பஸ்கள் இன்று காலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பஸ்களில், குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மினி பஸ்கள் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால், கிராமப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார், ''ஏற்கனவே டவுன் பஸ்கள் இயங்கக் கூடிய 65 சதவீதம் இடம், டவுன் பஸ்கள் செல்ல முடியாத பகுதிகள் 35 சதவீதம் இடம் என மொத்தம் 100 சதவீதம் இடங்களிலும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 116 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, நகர்ப்புற பகுதி மக்களை விட, கிராமப்புற பகுதி மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாகும். மிக குறுகலான சாலையில் கூட இந்த மினி பஸ்களை இயக்கி, மக்களுக்கு சேவை அளிக்க முடியும்'' எனத் தெரிவித்தார்.