தமிழ்நாடு

கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!
A father who killed his three children commits suicide
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வேம்பகவுண்டன்புதூர் கிராமத்தில், கடன் தொல்லையால் மூன்று குழந்தைகளைத் தந்தை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொன்ற பிறகு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

3 குழந்தைகள் கொலை, தந்தை தற்கொலை

வேம்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (35), அவரது மனைவி பாரதி (26) ஆகியோருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குப் பிரக்திஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ (7), தேவா ஸ்ரீ (6) என மூன்று பெண் குழந்தைகளும், அனிஸ்வரன் (1) என்ற ஒரு மகனும் இருந்தனர்.

நேற்று இரவு குடும்பத்துடன் மேகி சாப்பிட்ட பிறகு, பாரதியும் அவரது மகன் அனிஸ்வரனும் படுக்கையறைக்குச் சென்று உறங்கினர். கோவிந்தராஜ், தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வீட்டின் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு சுமார் 3 மணியளவில், கோவிந்தராஜ் தனது மனைவியும் மகனும் உறங்கிய அறையை வெளிப்பக்கமாகப் பூட்டினார். பின்னர், ஹாலில் தூங்கிக்கொண்டிருந்த தனது மூன்று பெண் குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்தார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பாரதி விழித்துக்கொண்டு, அறையின் உள்ளிருந்து கூச்சலிட்டார்.

போலீசாருக்கு தகவல்

அதிகாலை 4 மணியளவில், பாரதி படுக்கையறையின் உள்ளே இருந்த மற்றொரு சாவியைத் தேடி கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது, மூன்று மகள்களும், கணவரும் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மங்களபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவிந்தராஜின் சடலத்தையும், மூன்று பெண் குழந்தைகளான பிரக்திஷா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவா ஸ்ரீ ஆகியோரின் சடலங்களையும் கைப்பற்றினர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடன் தொல்லை காரணமா?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டுக் கடன் காரணமாக சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை முறையாகச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம், அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).