தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் தவெக வெல்லும்.. புஸ்ஸி ஆனந்த் சூளுரை

”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் தவெக வெல்லும்.. புஸ்ஸி ஆனந்த் சூளுரை
Anand said TVK Will Win All 7 assembly constituency in Dindigul districts in 2026 elections
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும், 2026-ல் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைமை சார்பில், தாடிக்கொம்பு சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பொதுச் செயலாளர் ஆனந்த், "தங்களை நேரடியாக அழைப்பதற்காகத்தான் இந்த கூட்டம். நேரம் இருந்திருந்தால் தங்களின் வீட்டிற்கே வந்து அழைத்திருப்பேன்" என்று கூறினார்.

தவெகவின் உயிர் மூச்சு விஜய் தான்:

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்தால் போதும், அம்மா, அப்பா என குடும்பத்துடன் வரும் மாநாட்டிற்கு வரும் கட்சியாக த.வெ.க உள்ளது. இது அன்பால் சேர்ந்த கூட்டம். தலைவர் ஒரு முகம் இருந்தால் போதும். இது காசு பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது. உணர்வுடன் சேர்ந்த கூட்டம். தவெக-வின் உயிர் மூச்சு விஜய் தான்.

விக்கிரவாண்டி வெற்றி மாநாட்டில், வாகனங்களின் எண், இன்சூரன்ஸ், ஓட்டுநரின் பெயர், உரிமம் என அனைத்தையும் பதிவு செய்தோம். இவ்வாறு மாநாடு நடத்தும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். நமது தலைவர் விஜய் காசு பணம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரிடம் நல்ல மனசு இருக்கிறது. வயது முதிர்வின் காரணமாக அவர் அரசியலுக்கு வரவில்லை. தனது துறையின் உச்சத்தில் இருந்துதான் விஜய் அரசியலுக்கு வருகிறார்.

2026-ல் திண்டுக்கல்லில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும். வேலை நாட்களில் கூட தவெக கூட்டங்களுக்கு அனைவரும் வருவார்கள். கடந்த 32 ஆண்டுகளாக, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக உழைத்து வருகிறோம். விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்று தெரியாமலேயே மக்களுக்கு உதவி செய்த ஒரே இயக்கம் நமது இயக்கம் தான்.

2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். அவர் மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்" என்றும் தொடண்டர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.