தமிழ்நாடு

போற இடத்துல காபி தரங்களா? நானே வந்திருப்பனே.. வீடியோ காலில் தொண்டர்களுடன் பேசிய முதலமைச்சர்!

வீடு வீடாகச் சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கலந்துரையாடினார்.

போற இடத்துல காபி தரங்களா? நானே வந்திருப்பனே.. வீடியோ காலில் தொண்டர்களுடன் பேசிய முதலமைச்சர்!
போற இடத்துல காபி தரங்களா? நானே வந்திருப்பனே.. வீடியோ காலில் தொண்டர்களுடன் பேசிய முதலமைச்சர்!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று பரப்புரையைத் தொடங்கினார்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும், திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். விருப்பப்படுவோரை திமுகவில் உறுப்பினராகவும் சேர்த்தனர். அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது வீடியோ கால் வாயிலாக கட்சி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது, அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கப் பெறுகிறதா? இந்த ஆட்சி உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று பொதுமக்களிடமும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், ஸ்டாலினிடம் இன்று காலை முதல் நடந்து வரும் பணிகள் குறித்து விளக்கினார். 2 தொகுதிகளை முடித்து விட்டோம் எனச் சொன்ன அவரிடம், பொறுமையாக பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப ஸ்பீடா பண்ண வேண்டாம் என்றார். மேலும், நீங்கள் செல்லுமிடங்களில் பொதுமக்கள் வீட்டில் காபி எல்லாம் தராங்களா? என்று பொதுமக்களிடத்தில் கலகலவென பேசினார். அவர்கள் சாப்பிடவே கூப்பிட்டார்கள் என மாவட்டச் செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்த அடுத்த நொடி, "தெரிந்திருந்தால் நானே வந்திருப்பேனே" என்று சிரித்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய உடன் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வாருங்கள் என்று வரவேற்பு அளித்தனர்.

மேலும், அங்கிருந்த பொதுமக்களிடமும் வீடியோ கால் வாயிலாக பேசி, திட்டங்கள் உங்களை வந்து சேர்கிறதா என்று முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும் "இந்த ஆட்சி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" எனக் கேட்டார் ஸ்டாலின். அதற்கு அப்பகுதி மக்கள், "ரொம்ப பிடிச்சிருக்கு சார், எப்பவுமே நீங்கதான் வரணும்" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல், கன்னியாகுமரியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகிகளிடம் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.