சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் மாதத்தில் தாஜ்மகால் மற்றும் ஆப்ரிக்கா ஜங்கிள் சபாரி என்ற பெயரில் மெகா கண்காட்சி நடத்துவதற்கு, திறந்தவெளி நிலம் மற்றும் வாகன நிறுத்தம் இடம் 2 லட்சம் சதுர அடி நிலத்தை, சென்னையை சேர்ந்த இமேஜ் எக்ஸ்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஒதுக்கியது.
இதற்காக முழு வாடகைக் கட்டனமான ஒரு கோடியே 10 லட்சத்து 8 ஆயிரத்தையும் செலுத்தி, ரூ. 3 கோடிக்கு மேல் முதலீடு செய்து, ஸ்டால்களை அமைக்கத் தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் செப்டம்பர் 11 ஆம் தேதி, கண்காட்சி வளாகத்துக்குள் நுழைந்து, வாகன நிறுத்துமிடத்தை அளவீடு செய்ததுடன், அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கண்காட்சியை நடத்தும் நிறுவனத்தை வாய்மொழியாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த வாய்மொழி உத்தரவு தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழகத்தை அணுகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, இமேஜ் எக்ஸ்போ சிஸ்டம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் எம். விஜய் ஆனந்த் ஆஜராகி இடம் ஒதுக்கப்பட்டது முதல் வெளியேற சொன்னது வரையிலான நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை கண்காட்சியில் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இடையூறு ஏற்படுத்தவோ அல்லது மாற்றி அமைக்கவோ கூடாது என, சுற்றுலா துறை, சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை, பொதுப்பணித் துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம், மின் துறை ஆகியோருக்கு, இடைக்கால உத்தரவினை பிறப்பித்துள்ளார்.