தமிழ்நாடு

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்
CM Stalin Offers Condolences as Three Boys Drown in Maruthakudi Thanjavur area
மருதகுடி கிராமத்தில் சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு ஊரணி குளம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருவிழா நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 11) மாலை, திருவேங்கலமுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாதவன் (10), செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10), மற்றும் ஸ்ரீதர் என்பவரின் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல், மருதகுடி ஊரணி குளத்தில் குளிப்பதற்காக வந்துள்ளனர். மாதவன் மற்றும் பாலமுருகன் இருவரும் ஐந்தாம் வகுப்பும், ஜஸ்வந்த் மூன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

மாலை வெகுநேரமாகியும் மாதவன் உட்பட மூவரும் வீட்டிற்கு வராததால், அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடத் தொடங்கினர். அப்போதுதான் அவர்கள் மருதகுடி ஊரணிக்குச் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று இரவு அங்கு சென்று பார்த்தபோது, ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த காலணிகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. பின்னர் மீட்கப்பட்ட சிறுவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால், குளிப்பதற்காக இறங்கிய சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கியிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவம் தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.