தமிழ்நாடு

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு? சிஎம்ஆர்எல் கொடுத்த விளக்கம்!

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு? சிஎம்ஆர்எல் கொடுத்த விளக்கம்!
CMRL explanation
போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளதாகச் செய்தி வெளியான நிலையில், இந்தத் தகவல் உண்மையில்லை எனச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் நிராகரிப்பு குறித்த செய்தி மற்றும் காரணம்

கோவை மாநகரில் 34.8 கி.மீ. தொலைவுக்கு ரூ. 10,740.49 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டமும், மதுரை மாநகரில் 32 கி.மீ. தொலைவுக்கு ரூ. 11,368.35 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் 50% பங்கீடுக்காக தமிழக அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. பல மாதங்களாக மத்திய அரசு நிலுவையில் வைத்திருந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், ஆனால் கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, இந்தத் திட்ட அறிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளதாகச் செய்தி வெளியானது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் விளக்கம்

இந்த நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. "கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தியில் உண்மையில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - விரிவான திட்ட அறிக்கை குறித்து தமிழக அரசிடம் கூடுதல் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் கேட்டு திட்டம் தொடரப்படும்" என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.