தமிழ்நாடு

தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை- பிரதமர் மோடி பேச்சு

“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை- பிரதமர் மோடி பேச்சு
PM Modi
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாடினார்.

மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இரவு 7.45 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவரை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தடப் பணிகள், மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு, ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளையம் இருவழிப் பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை திட்டம், மற்றும் ரூ.1,030 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் ‘வணக்கம்’ எனக்கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “4 நாட்கள் வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு கடவுள் ராமரின் மண்ணில் கால் வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன். அது அவருக்குப் பிடித்திருந்தது. பாண்டிய நாட்டு முத்துக்கள் ஒருகாலத்தில் பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்தன.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை

தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் ரூ.2500 கோடி மதிப்பிலான சாலை வசதி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளோம். கூடங்குளம் அனுமின் திட்டத்தின் மூலம் மின்சாரத் திட்டங்களுக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.

பாரதியாருக்கு தூத்துக்குடி போல எனக்கு காசியோடு உறவு

சுப்பிரமணிய பாரதியாருக்கு தூத்துக்குடியோடு எவ்வளவு உறவு இருக்கிறதோ, அதே அளவு உறவு எனது மக்களவை தொகுதியான காசியோடும் இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் வாயிலாக நமது கலாச்சார மரபுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். வ.உ.சிதம்பரனாரின் தொலைநோக்கு சிந்தனை போற்றுதலுக்கு உரியது. அவர் ஆங்கிலேயருக்கு எதிராக சவால் விட்டு கப்பலை இயக்கினார். கட்டபொம்மனும், அழகுமுத்துக்கோனும் சுதந்திரத்திற்காக போராடினர்.

3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்

புதிய பொருளாதார திட்டத்தின் மூலம் இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும். பிரிட்டனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம் அளிக்கும். தடையில்லா வர்த்தகத்தால் பிரிட்டனில் விற்கப்படும் 99% இந்திய பொருட்களுக்கு வரி கிடையாது.

நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, எரிசக்தி துறைகளில் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்செந்தூர் முருகனின் ஆசியோடு வளர்ச்சித் திட்டங்கள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.