தமிழ்நாடு

விமானத்தை டார்கெட் செய்து லேசர் ஒளி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தை டார்கெட் செய்து லேசர் ஒளி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்
Dubai plane was mysteriously targeted with a laser light when landing at Chennai airport
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 326 பயணிகள் உடன், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது.

விமானத்தை நோக்கி வந்த லேசர் லைட்:

அப்போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. இதனால் விமானி சற்று நிலை குலைந்தாலும், அடுத்த சில வினாடிகளில் தன்னை சுதாகரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்து கொண்டு இருந்த, விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கும் போது, அதற்கு இடையூறு செய்வது போல் லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்படுகிறது என்று புகார் செய்தார்.

இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள, ரேடர் கருவினால், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு மேற்கொண்டனர். சில வினாடிகளில் அந்த ஒளி, நின்று விட்டது.

இதை அடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் அதன் பின்பு பத்திரமாக தரையிறங்கியது. அதன்பின்பு தரையிறங்க வந்த விமானங்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்து தரையிறங்கின.

போலீசார் வழக்குப்பதிவு:

ஆனாலும் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இதுபற்றி சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களும் தகவல் கொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்:

இதைப்போல் விமானங்கள் மீது லேசர் லைட்கள் அடிக்கும் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ச்சியாக அடிக்கடி நடந்தன. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் இதுகுறித்து டிவிட்டரில், எச்சரிக்கை விடுத்ததோடு, இதை போல் விமானம் போக்குவரத்துக்கு இடையூறு செய்வர் குறித்து தகவல் தெரிந்தால், அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அதோடு சென்னை விமான நிலைய போலீசாரும் தனிப்படை அமைத்து, சென்னை பழவந்தாங்கல் மற்றும் பரங்கிமலை பகுதியில் இருந்து வட மாநில கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேரை பிடித்துக் கொண்டு வந்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள், நாங்கள் விளையாட்டாக அடித்தோம் என்று கூறி மன்னிப்பு கேட்டனர். அவர்களிடமிருந்து லேசர் லைட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

அதன்பின்பு இதைப் போன்ற விமானங்களில் லேசர் லைட்கள் அடிக்கும் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளாக, சென்னை விமான நிலையத்தில் நடக்காமல் இருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் அதே போல் ஒரு சம்பவம், சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.