தமிழ்நாடு

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் இன்று காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தபோது, அப்போதைய காவல்துறை ஐ.ஜி. ஜாபர் சேட்டுக்கு சட்டத்திற்குப் புறம்பாக இடம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜாபர் சேட் மனைவி மற்றும் மகள் பெயர்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள்குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமியை ஒன்பது மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை மற்றும் திண்டுக்கல் உட்பட பல இடங்களில் இந்தச் சோதனை நடந்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அடையாறு, பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்திலும், திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ விடுதியிலும் அவரது அறைக்கு வெளியே அதிகாரிகள் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல், திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனைகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.