தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஏஜென்ட்.. திமுக எம்எல்ஏ எழிலரசன் விமர்சனம்!

அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஏஜென்ட்.. திமுக எம்எல்ஏ எழிலரசன் விமர்சனம்!
எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஏஜென்ட்.. திமுக எம்எல்ஏ எழிலரசன் விமர்சனம்!
“எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஏஜென்ட் ஆகச் செயல்பட்டு வருகிறார். பாஜக என்ற ஆக்டோபஸ், அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப் பார்க்கிறது. விழித்துக் கொள்வோர் பிழைத்துக் கொள்வார்கள்” என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான சி.வி.எம்.பி. எழிலரசன் பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமைப் பார்வையிட்டபின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செங்கோட்டையன் பேசியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

“அதிமுகவின் உட்கட்சி விவகாரம்குறித்து திமுக கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், பாஜகவின் ஏஜெண்டாகத்தான் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஆகையால், பாஜகவின் ஏஜெண்டாக அதிமுகவின் பல பிரிவுகள் உருவாகியுள்ளன. முதல் ஏஜெண்டாக எடப்பாடி பழனிசாமியும், இரண்டாவதாகச் செங்கோட்டையனும் இருந்து வருகிறார். இன்னும் எத்தனை ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் என்பதை அமித்ஷாவைக் கேட்டால் தெரியும்,” என்று எழிலரசன் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “பாஜக நினைத்திருந்தால் என்றோ அதிமுகவை ஒன்றிணைத்திருக்கலாம். ஆனால், தற்போது பாஜக என்ற ஆக்டோபஸ் தனது வேலையைக் காட்டி வருகிறது. அதிமுக பிளவுபட்டிருந்தாலும், ஒன்றிணைந்தாலும் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது,” என்று அவர் பேசினார்.