தமிழ்நாடு

கும்பகோணம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு...மாநகராட்சிக்கு கெடு விதித்த சென்னை ஐகோர்ட்

கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

கும்பகோணம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு...மாநகராட்சிக்கு கெடு விதித்த சென்னை ஐகோர்ட்
சென்னை உயர்நீதிமன்றம்
கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ரூ.5 லட்சம் அபராதம்

இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், மொத்தமுள்ள 44 குளங்களில், ஏழு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி மீட்கப்பட்டுள்ளது. மூன்று குளங்களில் மரங்கள் உள்ளதாகவும், நான்கு குளங்கள் தொடர்பாக மதுரை அமர்வில் வழக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாவட்ட நீதிபதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு மாதங்களில் அகற்ற வேண்டும் என நீர்வளத்துறைக்கு கெடு விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இல்லாவிட்டால் கும்பகோணம் மாநகராட்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மாநகராட்சிக்கு நீதிமன்றம் கெடு

குறித்த காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரி, மாவட்ட நீதிபதி விண்ணப்பிக்க அனுமதியளித்தும் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அனுமதியில்லாமல் குளங்கள், வாய்க்கால்களில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனவும், பொற்றாமரை குளத்தின் வரத்துக் கால்வாய்களை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், கும்பகோணம் மாநகராட்சிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.