தமிழ்நாடு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. படகு போக்குவரத்து நிறுத்தம்!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், கரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. படகு போக்குவரத்து நிறுத்தம்!
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… படகு போக்குவரத்து நிறுத்தம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து சுமார் 70 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவேரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மேட்டூர் அணை நான்காவது முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீரானது காவேரியில் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 70 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகச் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவேரி கரையோர பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலிப்பெருக்கியின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நெடுங்குளம் காட்டூர், கோட்டைமேடு பரிசல் துறை, காட்டூர் பரிசல் துறை, மற்றும் பூலாம்பட்டி கரையோரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்குக் காவிரியில் குளிக்கவும், துணி துவைக்கவோ, மற்றும் கால்நடைகளை மேய்க்கவோ கூடாது எனவும் காவிரியில் இறங்கி செல்பி எடுக்கவோ கூடாது எனவும் தாழ்வான பகுதியிலுள்ள மக்கள் மேடான பகுதிக்குச் செல்லுமாறு எனவும் ஒலிப்பெருக்கியின் மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேட்டூரிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் மாவட்டம் பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை இடையே இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. காவேரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காவிரியை கடந்து செல்ல 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலைக்குப் பொதுமக்கள் ஆளாகியுள்ளனர்.