தமிழ்நாடு

பழைய குற்றால அருவி போறீங்களா? ஒரு நிமிஷம்.. வனத்துறையின் முக்கிய அறிவிப்பு

பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பழைய குற்றால அருவி போறீங்களா? ஒரு நிமிஷம்.. வனத்துறையின் முக்கிய அறிவிப்பு
Forest Department Report regarding Old Courtallam Falls
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பழைய குற்றாலம் அருவியானது, குற்றாலப் பேரருவியிலிருந்து சுமார் 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவி இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் இயற்கையாக உருவான ஒரு பள்ளத்தாக்கில் இருந்து நீர் பாய்கிறது. இதன் தனித்துவமான அமைப்பு, மற்ற அருவிகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இதனிடையே பழைய குற்றால அருவியானது யாருக்கு சொந்தம் என்கின்ற பிரச்சனை பொதுப்பணி துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு இடையே எழுந்த நிலையில், பழைய குற்றாலம் அருவி உள்ள பகுதி வன எல்லைப் பகுதிக்கு உட்பட்டு வருவதால் பழைய குற்றால அருவியானது வனத்துறைக்கு சொந்தம் என முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம்:

இந்நிலையில், அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது வனத்துறையினர் ஆஜராகி தங்களது விளக்கங்களை தெரிவித்தனர்.இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரே முடிவெடுக்கலாம் என தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான கிருஷ்ண முரளி மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய இருவரும் பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

24 மணி நேரமும் அனுமதி வழங்க மறுப்பு:

சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை தொடர்பான மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட வன அதிகாரிக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த மனு தொடர்பாக தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வனப்பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் நடைமுறையே தொடரும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனுதாரருக்கு பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தற்போது வனத்துறையினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சற்று கவலையடைந்துள்ளனர். பழைய குற்றாலம் வெறும் ஒரு நீர்வீழ்ச்சி மட்டுமல்ல, அது மேற்குத் தொடர்ச்சி மலையின் மூலிகை வளம், அமைதியான சூழல் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட ஓர் இடமாகும்என்பது குறிப்பிடத்தக்கது.