தமிழ்நாடு

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு
government has issued a new order regarding car accident in tuticorin
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் நேற்றைய தினம்(17.5.2025) மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் - சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது.

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்:

ஆம்னி காரில் பயணித்தவர்கள் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக குடும்பமாக வருகைத்தந்து உள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். இதற்கிடையில் காருக்குள் இருந்த ஒரு பெண் உட்பட 3 பேர் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர். அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூற, பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால், கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி கிணற்றுக்குள் மூழ்கிய 5 பேரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி துரிதப்பட்டது. மீட்பு பணி பலனளிக்காத நிலையில் கிணற்றுக்குள் மூழ்கிய குழந்தை உள்பட 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

3 லட்ச ரூபாய் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

இந்த விபத்து சம்பவத்தில், ரவி கோயில் பிச்சை (வயது 60), ஹெச்சியா கிருபாகரன் (வயது 49), மோசஸ் (வயது 50), வசந்தா (வயது 49), மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் என ஐந்து நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்க:

கிணற்றில் ஆம்னி வேன் மூழ்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.