தமிழ்நாடு

கோவையில் நடந்த விபரீதம்.. விவசாயக் கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு!

கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடந்த விபரீதம்.. விவசாயக் கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு!
Heartbreaking Incident: Wild Elephant Found Dead in Coimbatore Well
நேற்று இரவு, சோலை படுகை வனப்பகுதியிலிருந்து வெளிவந்த மூன்று காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. உடனடியாக விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மூன்று யானைகளில் இரண்டு வனப்பகுதிக்குள் திரும்பிச் செல்ல, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு காட்டு யானை வழி தெரியாமல் தவித்துள்ளது. சோலை படுகை அருகே உள்ள விவசாயி கணேசனுக்கு சொந்தமான தோட்டத்திலிருந்த கிணற்றுக்கு அருகில் சென்றபோது, கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தது.

இதுகுறித்து விவசாயி கணேசன், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஜே.சி.பி, புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்க முயன்றனர். எனினும், சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பகுதியில் முகாமிட்டு சுற்றி வந்த இந்த காட்டு யானையினை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை குற்றாலம் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. விவசாயக் கிணற்றில் யானை விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கைகள்:

இந்தச் சம்பவம் குறித்து வனவிலங்கு நல ஆர்வலர்கள் தங்கள் கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். "நமது காடுகளின் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் முக்கியப் பங்காற்றிய ஓர் ஆண் யானையை இப்போது நாம் இழந்துள்ளோம்," என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

"யானைகளைக் காக்க, மேம்பட்ட AI தொழில்நுட்பங்கள் மூலம் ஒருபுறம் மதுக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிபடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், மத்வராயபுரம் கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் ஊருக்குள் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல விவசாயிகள், குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். தென்னை, வாழை மற்றும் பல வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், மாட்டுத் தொழுவங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன."

"இதற்கு நிரந்தரத் தீர்வு எடுக்க பலமுறை வனத்துறையிடமும், முன்னாள் மாவட்ட ஆட்சியரிடமும் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மனு கொடுத்தார்கள். ஆனால், தற்போது வரை இந்தப் பகுதியில் நிரந்தரத் தீர்வு காண எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை," என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், "கிராம மக்கள் சார்பில் வனத்துறையிடம், குறிப்பாக தினமும் ஊருக்குள் புகுந்து வரும் இரண்டு காட்டு யானைகளைப் பிடித்து வேறு அடர் வனப்பகுதியில் விடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கும் இதுவரை எந்தத் தீர்வும் எடுக்கப்படவில்லை. தற்போது நாம் ஒரு வாயில்லா ஜீவனை இழந்து நிற்கிறோம். இதற்கு நிரந்தரத் தீர்வு எடுக்க வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.