தமிழ்நாடு

Heavy Rain: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!
Heavy rain likely in Tamil Nadu for next three days
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (செப்.30), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 3-ஆம் தேதி வாக்கில் காலை கரையை கடக்கக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக,இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், நாளை (அக்.02) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அக்.3 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அக்.04 ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.