தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் பிப். 21 ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Heavy Rain
தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் பிப். 21 ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (பிப்.16) காலை 08:30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிவுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18 ஆம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெறக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், 22 ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.