தமிழ்நாடு

ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் – கேரள இளைஞர் கைது

சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

 ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் – கேரள இளைஞர் கைது
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட உயர் ரக கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்திற்கு மலேசிய நாட்டிலிருந்து உயர் ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்திக்கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

உயர் ரக கஞ்சா பறிமுதல்

இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் இறங்கி பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக்கொண்டு இருந்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர் மலேசிய நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்று விட்டு, திரும்பி வந்ததை கண்டுபிடித்தனர். மலேசியாவில் இருந்து கேரளாவிற்கு நேரடி விமானம் இருந்தும் சென்னைக்கு வந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.அப்போது கேரள பயணி, முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவருடைய உடமைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.

அவருடைய சூட்கேஸில் மறைத்து வைத்திருந்த 6 பார்சல்களில், உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 6 பார்சல்களிலும், 4 கிலோ எடையுடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கேரளப் பயணியை கைது செய்தனர்.

கேரள இளைஞர் கைது

இந்த நிலையில் கேரள பயணியிடம் நடத்திய விசாரணையில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சூட்கேஸை ஒருவர் தந்து, இதில் பிஸ்கட்கள், சாக்லேட்டுகள், குழந்தைகள் விளையாடும் டாய்ஸ் போன்றவைகள் இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் எங்கள் உறவினர் ஒருவர், உங்களை அடையாளம் கண்டு, சூட்கேஸை வாங்கிக்கொண்டு, உங்களுக்கு அன்பளிப்பாக, பணம் கொடுப்பார் என்று கூறினார்.இதில் போதைப்பொருள் இருப்பது எனக்குத் தெரியாது. பணத்துக்கு ஆசைப்பட்டு, நான் சூட்கேஸை வாங்கி வந்தேன் என்று கேரள பயணி கூறினார்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், கேரள பயணி மூலமாக சூட்கேசை வாங்க வந்திருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரையும் பிடிப்பதற்கு, நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் பயணி சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார் என்பதை அறிந்து வாங்க வந்த போதைக்கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். ஆனால் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.