தமிழ்நாடு

துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தமிழகம் வருகை!

இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தமிழகம் வருகை!
INDIA Alliance Vice-Presidential Candidate Sudarshan Reddy Arrives in Tamil Nadu to Seek Support
துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை கடந்த ஜூலை 21, 2025 அன்று ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 17-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக, மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

தமிழர் ஒருவர் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், திமுக தனது ஆதரவினை சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என தமிழகத்திலுள்ள எதிர்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கினர். ராஜ்நாத் போன்ற பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் நேரடியாக திமுகவிற்கு கோரிக்கை வைத்தனர்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியா கூட்டணியினர் ஒருமித்த கருத்துடன் தங்கள் தரப்பு வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

தமிழகம் வருகை: முதல்வருடன் சந்திப்பு

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுதர்சன் ரெட்டி, இன்று தமிழகம் வருகைத் தந்துள்ளார். திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்த சுதர்சன் ரெட்டிக்கு, விமான நிலையத்தில் திமுக சார்பில் ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதி மாறன், காங்கிரஸ் சார்பில் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை, சுதர்சன் ரெட்டி சந்திக்கவுள்ளார்.

சுதர்சன் ரெட்டி பின்னணி என்ன?

இந்திய நீதித்துறையின் உயரிய பதவிகளில் ஒன்றாகக் கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பி. சுதர்சன் ரெட்டி. இவர் ஜூலை 8, 1946 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர், அவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1971-ல் ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சிவில் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் வாதாடினார். 1988-ல் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

1995-ஆம் ஆண்டு, சுதர்சன ரெட்டி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் வழங்கிய தீர்ப்புகள் நீதித்துறையின் கவனத்தை ஈர்த்தன. 2005-ல் அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற சுதர்சன ரெட்டி 2007-ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2011-ல் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.

தேர்தல் எப்போது?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான களத்தில் இரு வேட்பாளர்கள் இருப்பதால் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. அன்றையத் தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைப்பெறும். அன்றையத் தினமே வாக்கு எண்ணிக்கையானது நடைப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.