தமிழ்நாடு

பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்களான வீரச்சாமி (40) - பஞ்சவர்ணம் (36) தம்பதியரின் மகன் கோடீஸ்வரன் (5), நேற்று விடுமுறை என்பதால் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சிறுவன் உறவினர்களின் மேற்பார்வையில் இருந்துள்ளான்.

வாயில் நுரை தள்ளி மயக்கம்

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளான். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவனை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த கூமாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோடீஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்ததால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாமெனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட விடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.