தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 8 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 8 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
CBI Investigation
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், வேலுச்சாமிபுரத்தில் உள்ள 8 வணிகர்கள் சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க இன்று நேரில் ஆஜராகி உள்ளனர்.

சம்மன் மற்றும் விசாரணை விவரங்கள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஜவுளிக்கடை உரிமையாளர், செல்போன் கடை உரிமையாளர், மெக்கானிக் ஷாப் உரிமையாளர் என மொத்தம் 8 பேர் சம்மனுக்கு ஆஜராகி, சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

3டி லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு

சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக வேலுச்சாமிபுரத்தில் 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் அப்பகுதியில் அளவிடும் பணியை மேற்கொண்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தின் முழுமையான நிலவரத்தை அறிந்துகொள்ளும் வகையில், சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணியானது நடைபெற்றது.

சம்பவம் நடந்த இடம், பாதையின் அமைப்பு மற்றும் நெரிசலின் தன்மையை ஆராய்வதற்காக இந்த நவீன கருவிகளைப் பயன்படுத்திய சிபிஐ அதிகாரிகள், இன்று சம்மன் அனுப்பிய நபர்களிடம் நேரில் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.