தமிழ்நாடு

தமிழக பாஜக மாநில துணை தலைவராக குஷ்பு நியமனம்!

நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக மாநில துணை தலைவராக குஷ்பு நியமனம்!
Kushboo appointed as TN BJP state vice president
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், நடிகை குஷ்பு, கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன் தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என். சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில பொதுச் செயலாளர்களாக பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், மலர்கொடி, சுமதி வெங்கடேசன், மீனாட்சி, சதீஷ்குமார், மீனாதேவ், வினோத் செல்வம், அஸ்வத்தாமன், ஆனந்தபிரியா, பிரமிளா சம்பத், கதளி நரசிங்கபெருமாள், நந்தகுமார் ரகுராமன் (எ) முரளி, அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அலுவலக செயலாளராக எம்.சந்திரனும், மாநில தலைமை செய்தி தொடர்பாளராக நாராயணன் திருப்பதியும், மாநில ஊடக அமைப்பாளராக ரெங்கநாயகலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும், “தனக்கு கட்சியில் பதவி வழங்கப்படும்” என கூறி வந்த விஜயதரணிக்கு இம்முறையும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.