தமிழ்நாடு

17 வருஷமா குழந்தை இல்லையா? பெண்ணை நூதனமாக ஏமாற்றிய மந்திரவாதி

Witchcraft Arrest in Chennai : 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி 5 சவரன் தங்க நகையினை திருடிய மாந்திரீக மந்திரவாதியினை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை.

17 வருஷமா குழந்தை இல்லையா? பெண்ணை நூதனமாக ஏமாற்றிய மந்திரவாதி
Man arrested in Chennai for cheating childless woman for 17 years
Witchcraft Arrest in Chennai : சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வ.விசாலினி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இவரது வீட்டிற்கு ஜோசியம் பார்ப்பதாக கூறி ஒருவர் வந்துள்ளார். விசாலினியிடம் ஜோசியம் பார்த்த போது அவருக்கு குழந்தை இல்லை என தெரிந்து கொண்டு ஆறுதலாக பேசுவது போல நடித்துள்ளார். பிறகு மாந்திரீக பூஜை செய்தால் "உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும், தோஷம் கழியும் என்றும்" நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.

தங்க நகை வைத்து மாந்திரீக பூஜை:

இதனை முழுமையாக நம்பிய விசாலினி எவ்வளவு செலவாகும் என கேட்டதாக தெரிகிறது. அதற்கு ரூ.35 ஆயிரம் செலவாகும் என்றும், 7 பேர் வந்து மாந்திரீக பூஜை செய்வோம்" என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றும் கூறியதும் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். அதுவும் இல்லை என்றதும் ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார்.பணம் ஏதும் தற்போது இல்லை என விசாலினி குறிப்பிட, தங்க நகை வைத்து மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்று மந்திரவாதி கூறியுள்ளார்.

பிறகு தங்க நகையை எடுத்து வந்து அவரிடம் அந்த பெண் கொடுத்ததும், செம்பு ஒன்றில் சமையல் புளியை வைத்து கட்டி வைக்க வைப்பது போல நடித்து தங்க நகையை அவர் திருடி விட்டார். செம்பை மூடி வைத்து மாலையில் தான் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறி விட்டு மந்திரவாதி சென்று விட்டார். பிறகு செம்பை திறந்து பார்த்த போது தான் 5 சவரன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

சரித்திர பதிவேடு குற்றவாளி:

இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த போது மந்திரவாதியாக வந்தவர் நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (45) என்பதும், இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. நெல்லை விரைந்த போலீசார் அவரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.

கைதான சூர்யா கடந்த 2024 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலும் இதே போல நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரிடம் குடும்பத்தில் தோஷம் கழிப்பதாக கூறி 5 அரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். கைதான சூர்யா மீது தாராபுரம் காவல் நிலையத்தில் இதே போல வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. சூர்யாவுடன் உறவினர் ஒருவரும் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நகை திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். கைதான சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் கொளத்தூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.