தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்- இபிஎஸ் கடும் விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு

ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்- இபிஎஸ் கடும் விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கோவை மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்களை செய்திருக்கிறோம். 2011-2021ல் கோவை மாநகராட்சியில் உள்ள சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம்.

பாலம் கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு

ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறோம். வடக்கு சட்டமன்ற தொகுதியில் தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி இருக்கிறோம். ஸ்டாலின் பல்வேறு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கடந்த அதிமுக ஆட்சி இரண்டு ஆட்சி என சொல்லுகிறார். அவர் கண்ணை திறந்து பார்த்தால்தான் தெரியும். கோவை மாவட்டத்திற்கு வந்து பாலங்களை பார்த்தாலே நாங்கள் செய்த சாதனைகள் உங்களுக்கு சான்றுகளாக நிற்கும்.

கோவை மாநகர மக்கள் எங்கெல்லாம் பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்களோ, அங்கெல்லாம் பாலம் கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. ஆனால் அதை வந்து ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துவிட்டு காரில் அதே பாலத்தில் சொகுசாக செல்கிறார் ஸ்டாலின். சொல்லும்போது சொல்கிறார் பாலம் அழகாக இருக்கிறது என்று. நிச்சயமாக தான் இருக்கும் ஏனென்றால் அது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக அரசு

அதேபோல கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை இருக்கிறது என கோரிக்கை வைத்தனர். மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் 1100 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தத் திட்டத்திற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்து ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் திறந்து வைத்து சென்றார். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? இவ்வளவு செய்தது அதிமுக அரசு, ஆனால் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக அரசு. இவர்கள் கொண்டு வந்த திட்டம் போல் மக்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து திட்டங்களுமே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான். திமுகவால் திறக்கத்தான் முடியும் திட்டங்களை கொண்டுவர முடியாது. எப்பொழுது பார்த்தாலும் ஸ்டாலின் கூட்டணி பலமாக இருக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் மக்களை நம்பிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கு கூற விரும்புகிறேன். இங்கு கூட்டணியை நம்பிக்கொண்டிருக்கக்கூடாது. மக்களை நம்ப வேண்டும். ஆனால் மக்கள் இப்பொழுது இருக்க கூடிய விடியா அரசு எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து, 2026 சட்டமன்ற தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்

அதேபோல அந்த கூட்டணியில் இருக்கக்கூடிய குட்டிக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சி-கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே போய்விட்டது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். முகவரியே இல்லாமல் இருக்கிறது. நான் இதுவரை யாரையுமே குறைச்சொல்லி பேசியது கிடையாது. ஆனால் அடிக்கடி ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என சொல்லுகிறீர்களே எப்படி மீட்பீர்கள் எனக் கேட்கிறார்கள். நிச்சயமாக வரப்போகிற தேர்தல் மூலமாக தான் மீட்க போகிறோம். ஏனென்றால் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய பிரச்சனையை தீர்க்க முடியாத திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதல்வர் அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிற தேர்தல். தமிழ்நாடு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழகத்தை மீட்போம். அதுதான் இந்த அதிமுகவின் லட்சியம். அதனால் முத்தரசன் அவர்களே உங்கள் கட்சியைப் போன்று எங்கள் கட்சியை நினைத்து விடாதீர்கள். எங்கள் கட்சியில் பிரச்சனை என்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கள் கூட்டணியில் எப்பொழுதும் பிரச்சனையில்லை. பிரச்சனையே திமுக தலைமையில் இருக்கிற கூட்டணியில்தான் பிரச்சனை இருக்கிறது. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன் தலைவர் புதிதாக வந்திருக்கிறார். சண்முகம் அடிக்கடி பேசிவிட்டார், திமுக ஆட்சியில் மக்களுடைய பிரச்சனையை தீர்க்கவில்லை என்ற கருத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார்” என பேசினார்.