தமிழ்நாடு

திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-வது ஆண்டு முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முப்பெரும் விழா என்பது கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையென நாம் சூளுரைக்கும் நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாட்களையும், திமுக தொடங்கப்பட்ட நாளையும் இணைத்து, முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடங்கி வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த விழாவின்போது, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்குப் பெரியார், அண்ணா, பாவேந்தர் மற்றும் கலைஞர் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

கரூரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

கலைஞரின் மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வெளியே வெவ்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கோடாங்கிப்பட்டியில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருகிறார்.

விழாவுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விருதுகள் அறிவிப்பு

முப்பெரும் விழாவில் வழங்கப்படும் விருதுகளின் விவரங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்:

பெரியார் விருது: கவிஞர் கனிமொழி எம்.பி.

அண்ணா விருது: பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீதாராமன்

கலைஞர் விருது: நூறு வயது தொண்டர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.இராமச்சந்திரன்

இறுதியாக, கரூரில் நடைபெறும் விழாவில், உடன்பிறப்புகளாகிய நீங்கள் அலைகடலெனக் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.