தமிழ்நாடு

தினமும் பிக்-அப் பண்ண வரவா? பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது!

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் பிக்-அப் பண்ண வரவா? பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது!
Police Arrest Uber Bike Driver for Molesting Young Woman in Chennai
சென்னை வேப்பேரியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண் ஒருவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்த மாநிலம் குஜராத். இவர் தினமும் பைக் டாக்ஸி மூலம் வேலைக்குச் சென்று வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதற்காக ஊபர் பைக் டாக்ஸி ஒன்றை இளம்பெண் முன்பதிவு செய்திருந்தார்.

இதன்படி அவரை அழைத்துச் செல்ல வந்த பைக் டாக்சி ஓட்டுநர் தினமும் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணுடன் நன்றாகப் பேசிய அந்த ஓட்டுநர், தானே தினமும் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறியுள்ளார்.

நேற்று வழக்கம்போல் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் பைக் டாக்ஸி ஓட்டுநர் அழைத்துச் சென்றார். அண்ணா மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பைக் டாக்ஸியை ஓட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரின் பெயர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கி பைக் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார்.

இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சதீஷ் குமார் சூளைமேடு பகுதியில் தங்கி இருந்து பைக் டாக்சி ஓட்டி வந்தது தெரிய வந்தது. கைதான சதீஷ் குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல், மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான சதீஷ் குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.