தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... தீர்ப்பை பட்டாசு வெடித்து திமுகவினர் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... தீர்ப்பை பட்டாசு வெடித்து திமுகவினர் வரவேற்பு
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பை வரவேற்று திமுகவினர் கொண்டாட்டம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. முதலில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் தண்டனை விவரம் வெளியிடப்படும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதால் கோவை நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது நீதிமன்ற அறையின் கதவுகள் அனைத்து மூடப்பட்டிருந்தது. பின்னர் வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் மதியம் 12 மணியளவில் வழக்கின் தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார். அதில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திமுகவினர் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. இந்த நிலையில், வால்பாறை திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பொதுமக்களும் இணைந்து நகராட்சி அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.