தமிழ்நாடு

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!
உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!
கோயம்புத்தூரின் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் உள்ளாட்சிகளான தொண்டாமுத்தூர், பேரூர், தென்கரை, ஆலாந்துறை, நீலகிரி மாவட்டம் மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஆர்.எஸ்.புரம் ராஜன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கலைவாணிக்கு ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள்பற்றித் தெரியாததால், அவர் ராஜனின் செல்போன் எண்ணைத் தனது வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தார். இதனால் சாலைப் பணிகளுக்கான பொருட்களை வாங்குவதற்கும், பணிகளை முடித்தபிறகு ஒப்பந்த தொகையைப் பெறுவதற்கும் ராஜன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து வந்தார்.

ராஜனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், கலைவாணி தனது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்தார். அப்போது, மொத்தமாக ரூ. 1.11 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜனிடம் விசாரித்தபோது, அவர் ரூ. 33 லட்சம் கணக்குகளை மட்டுமே சரியாகக் காண்பித்தார். மீதமுள்ள ரூ. 78 லட்சம் பணத்தை தனது மனைவி மற்றும் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததை கலைவாணி கண்டறிந்தார்.

உடனடியாக அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் குமரேசன் மேற்பார்வையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜன் மோசடி செய்தது உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.