தமிழ்நாடு

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு.. மாணவியின் செயலால் பரபரப்பு!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு.. மாணவியின் செயலால் பரபரப்பு!
Student refused to receive degree from Governor
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநரை தவிர்த்த மாணவி

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில், வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் இன்று 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, 759 பேருக்குப் பட்டம் வழங்கினார்.

வழக்கமாக, மாணவர்கள் தங்களுக்குரிய பட்டத்தை மேடையில் உள்ள ஆளுநரிடம் காண்பித்து, அவரிடம் வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அப்போது, ஆராய்ச்சிக்காக பட்டம் பெற வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, ஆளுநரைத் தவிர்த்துவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டத்தைக் காண்பித்து, அவரிடம் மட்டும் வாழ்த்து பெற்று மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். அவரது இந்தச் செயலால், ஆளுநர் உட்பட மேடையில் இருந்தவர்களும், அங்கிருந்த மாணவ-மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவியின் விளக்கம்

ஆளுநரைத் தவிர்த்து பட்டம் பெற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீன் ஜோசப், "தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யாத ஆளுநரிடம் பட்டம் பெற எனக்கு விருப்பமில்லை. அதன் காரணமாகவே துணைவேந்தரிடம் பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். பட்டம் பெற்ற பிறகு அருகில் இருந்தவர்கள் என்னைப் பாராட்டினார்கள். தமிழக முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் என வேறு யாராவது பட்டத்தைக் கொடுத்திருந்தால் நான் அவர்களிடம் பட்டத்தைப் பெற்றிருப்பேன். இது எனது தன்னிச்சையான முடிவு. யாரும் என்னை இதற்கு நிர்பந்திக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், "நான் பி.காம். இளங்கலை பட்டப்படிப்பை நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியிலும், எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பை சிவகாசி மெப்கோ கல்லூரியிலும் படித்தேன். நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி பேராசிரியரின் வழிகாட்டுதலின் கீழ், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 'மைக்ரோ பைனான்ஸ்' பிரிவில் பி.ஹெச்.டி. முடித்துள்ளேன். தற்போது தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவர் ராஜன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணைச் செயலாளராக இருக்கிறார்" என்றும் அவர் கூறினார்.