தமிழ்நாடு

ரோலர் டெர்பி போட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ரோலர் டெர்பி போட்டியில் நாட்டிற்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்களைகளுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறையினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரோலர் டெர்பி போட்டி..  வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
தென்கொரியாவில் நடந்த ஆசிய சாம்பியன் ரோலர் டெர்பி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பிலும், உறவினர்கள் சார்பிலும் விமான நிலையத்தில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு சார்பில் வரவேற்பு

கடந்த ஆண்டு (2024) இத்தாலியில் நடந்த ஆசிய சாம்பியன் ரோலர் டெர்பி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதால், இந்தச் சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சென்னை வந்தடைந்த அவர்களை மலர்க்கொத்துகள், சால்வைகள் மற்றும் மலர் கிரீடம் அணிவித்து வரவேற்றனர்.

வெற்றி பெற்றவர்கள்

இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதுலா, கன்யா, ஷவில்யா, வருணிகா, மற்றும் பிரியதஷ்ணி ஆகிய ஐந்து வீராங்கனைகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் குழுவாக வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

வீராங்கனைகள் கோரிக்கை

வெற்றிக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தங்களது வெளிநாட்டுப் பயணச் செலவுகளை முழுமையாக ஏற்பது சர்வதேசப் போட்டிகளில் சாதிக்க ஒரு முக்கியக் காரணம் என்று தெரிவித்தனர். மேலும், சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

வெற்றிபெற்ற வீராங்கனைகள், தற்போது பல்வேறு தனியார் அரங்குகளில் பயிற்சி பெற்று வருவதாகவும், அரசுப் பயிற்சி அரங்குகளை அமைத்துத் தந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறினர். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பாளர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும் என்றும், அது அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராக ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தனர். இந்தச் சாதனையின் மூலம், தமிழ்நாட்டுக்கு ரோலர் டெர்பி விளையாட்டில் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.