தமிழ்நாடு

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!
கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!
கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பலைத் துரத்திச் சென்று கைது செய்தனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு, செட்டிபாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பிரபாகரன் மற்றும் காவலர் கனகராஜ் ஆகியோர் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான மூன்று பேரைப் பார்த்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுத்தது. அவர்களைச் சோதனையிட்டபோது, அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்களைத் தங்கிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அது, கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியெனத் தெரியவந்தது. விசாரணையில், விடுதி மாணவர்கள், மூத்த மாணவர்கள் சொன்னதால் தங்களது நண்பர்களை இரண்டு நாட்கள் தங்க வைத்ததாக" தெரிவித்தனர்.

போலீசார் விடுதி அறையில் நடத்திய சோதனையில், அதிபயங்கரமான பட்டாக்கத்தி, வீச்சரிவாள், ஸ்குரு டிரைவர், மற்றும் பேனா கத்தி போன்ற பல ஆயுதங்கள் மற்றும் 2 கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்போது, பிடிபட்ட மூவரில் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரைத் துணிச்சலுடன் துரத்திப் பிடித்த போலீசார் மல்லுக்கட்டிக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் கருப்புசாமி (24), சந்தோஷ்குமார் (20), மற்றும் பிரவீன் (19) என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் கருப்புசாமி மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உட்பட எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற இருவர் மீதும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவரை ஆயுதங்களுடன் நள்ளிரவில் துரத்தியதாகவும், அந்த மாணவர் தப்பி ஓடியதால் இவர்களைத் தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. துணிச்சலுடன் செயல்பட்டு, பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த இந்த இரண்டு காவலர்களுக்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். மூன்று பேர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.