தமிழ்நாடு

பூட்டிய கிணற்றில் மாணவன் சடலம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டிய கிணற்றில் மாணவன் சடலம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!
Student's body found in a closed well
திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவன் காணாமல்போன நிலையில், அதே பள்ளியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் முகிலன், திருப்பத்தூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1 ஆம் தேதி முகிலன் பள்ளி வகுப்புகளுக்கு வராததால், ஆசிரியர்கள் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

பெற்றோர் அதிர்ச்சி

ஆசிரியர்களின் கேள்வியால் அதிர்ந்துபோன பெற்றோர், தங்கள் மகன் பள்ளி விடுதியில்தான் தங்கிப் படித்து வருவதாகவும், எப்படி வீட்டிற்கு வருவான் என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர், கொத்தூரிலிருந்து உடனடியாகப் பள்ளிக்கு விரைந்தனர்.

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

இந்த நிலையில், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், இரண்டு நாட்களாக மாணவன் முகிலனைத் தேடி வந்தனர். தேடுதல் வேட்டையின் முடிவில், அதே பள்ளியில் உள்ள ஒரு கிணற்றில் முகிலன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டான். மாணவனின் சடலத்தை கண்ட பெற்றோர் கதறி அழுத்தது காண்போரை கண்கலங்க செய்தது.

பெற்றோரின் சந்தேகம் மற்றும் போலீஸ் விசாரணை

போலீசார் மாணவன் முகிலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியனின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பள்ளியில் உள்ள கிணற்றின் முகப்பு இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த நிலையில், முகிலன் எவ்வாறு அந்தக் கிணற்றில் விழுந்தான் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளி மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.