உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம், 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள பிரதான சாலையான சின்னக்கடை வீதியில், 621 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை மல்லிகா என்பவர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்து, வீடு மற்றும் சோடா கடை நடத்தி வந்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீண்டகால விசாரணைக்குப் பிறகு, அந்த இடம் திருக்கோவிலுக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், மண்டல இணை ஆணையர் உத்தரவின் பேரில், திருக்கோவில் இணை ஆணையர் பரணிதரன் முன்னிலையில், அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த இடத்தை மீட்கும் பணி தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் கொண்டு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் நிர்வாகம் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
மீட்கப்பட்ட இந்த இடத்தில், பக்தர்களின் வசதிக்காகப் பொருள்கள் வைப்பறை, கழிவறை, குளியலறை மற்றும் தங்கும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் தங்கும் அறைகள், கழிப்பிடங்கள் எனப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், இந்த நடவடிக்கையால் பக்தர்களுக்குப் பெரிய அளவில் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.