தமிழ்நாடு

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை
Tamilnadu farmers demand Rs 3500 per quintal for paddy (MSP)
திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தது. ஆனால், தற்போது வரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு-

தமிழ்நாட்டில் உற்பத்தி செலவு அதிகம்:

இந்தியாவிலேயே அதிக பரப்பளவில், அதிக அளவு விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியர்களின் உணவில் மிக அதிகமாக சேர்க்கப்படும் உணவுப் பொருள் அரிசியே ஆகும். ஒரிசாவில் நெல்லின் உற்பத்தி செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.17,000, சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு ஏக்கருக்கு உற்பத்தி செலவு ரூ.24,000, ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்தி செலவு சராசரியாக ரூ. 36,000. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலையாக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,320 வழங்கி வருவதுடன் ரூ.780 சேர்த்து சட்டிஸ்கர், ஒரிசா மாநிலங்கள் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 ஆக வழங்கி வருகின்றன.

இந்தியாவிலேயே நெல்லுக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில், மத்திய அரசு வழங்கி வரும் ரூ.2,320 உடன் 105 ரூபாய் சேர்த்து 2,325 ரூபாய் மட்டுமே தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் நெல் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறி வருகின்றனர். இந்திய அளவில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 8.62 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு, தற்போது 5.64 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அரிசிக்காக தமிழ்நாடு கர்நாடகாவையும், ஆந்திராவையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் நெல் பயிர் செய்த விவசாயிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே லாபமடைந்துள்ளனர், மற்ற ஆண்டுகளில் தொடர்ச்சியாக நஷ்டமே அடைந்துள்ளனர். மத்திய அரசு கொடுக்கிற குறைந்தபட்ச ஆதார விலை என்பது இந்தியா முழுவதும் பொதுவாக இருப்பதால் உற்பத்தி செலவு குறைவாக இருக்கிற மாநில விவசாயிகளுக்கு அது கட்டுபடியாக கூடியதாக இருந்தாலும், வட இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில அரசுகள் மத்திய அரசு வழங்கி வரும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையாக அதிக அளவு விலையை வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து, பாதுகாத்து வருகின்றன.

விவசாயிகளின் வருமானம்: தமிழகத்திற்கு 22-வது இடம்

இந்தியாவில் பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டில், விவசாயிகள் வருமானமானது இந்தியாவிலேயே 22-வது இடத்தில் இருக்கிறது, இது மிகப்பெரிய பின்னடைவு. இதற்கு காரணம் தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்து வருவதே ஆகும். தற்போதைய சூழ்நிலையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 இல்லாமல் தமிழ்நாட்டில் நெல் விவசாயம் செய்யவே முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் நெல் பயிர் செய்து கடுமையான நஷ்டம் அடைந்து கடனை கட்ட முடியாமல். கடனாளியாகி நிலத்தை இழந்து வருகிறார்கள்.

பயிர் கடனை கூட திருப்பி செலுத்த முடியாத அவல நிலை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது, இதனோடு அடிக்கடி புயல், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றாலும் தமிழ்நாட்டு விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது, பயிர் காப்பீடு வந்து விவசாயிகளை காப்பாற்றும் என்று சொன்னது, தற்போது பயிர் காப்பீட்டு நிறுவனங்களையே காப்பாற்றி வருகிறது. திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தது, 2021ல் மத்திய அரசு வழங்கி வந்த குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,888, அதனை படிப்படியாக ஆண்டுதோறும் மத்திய அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,320 மத்திய அரசு நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது, அடுத்த ஆண்டு அது ரூ.2,500 யை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு அறிவித்த ரூ.2,500 விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் ரூ.2,500 நாங்கள் வழங்கிடுவோம் என கடந்த ஐந்து ஆண்டுகளாக சொல்லி வருகிறார். ஆனால் அதற்காக ஒரு துரும்பை கூட தமிழ்நாடு அரசு கில்லி போடவில்லை, மாநில அரசினுடைய இந்த போக்கு தமிழ்நாட்டு பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, தமிழ்நாடு அரசினுடைய இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களை அண்டை மாநிலங்களில் உணவுக்கு கையேந்த வைத்திருக்கிறது.

எனவே இந்த நிலையை மாற்றிட தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உடனடியாக மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு வழங்கி வரும் ரூ.2,320 உடன் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். அப்படி வழங்கவில்லையென்றால் வருகிற சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு இந்த பிரச்சினை மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பதையும் பதிவு செய்கிறோம்.