தமிழ்நாடு

சட்டப்பேரவையில் சலசலப்பு: அமைச்சர் துரை முருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதம்!

சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் சலசலப்பு: அமைச்சர் துரை முருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதம்!
MLA Velmurugan argues with Minister Durai Murugan
தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 4-ஆம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், காவிரி உபரி நீர் விவகாரம் தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் வாக்குவாதம்

பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வேல்முருகன், "காவிரி உபரி நீர் அந்தியூர் - பவானி தொகுதிக்குச் செல்ல என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு உடனடியாகப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "பிற தொகுதி கோரிக்கையை ஏன் கேட்கிறீர்கள். பிற தொகுதி கோரிக்கையைக் கேட்க அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தப் பதிலை ஏற்காத வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சபாநாயகர் அப்பாவு தலையிட்டு, "தேவையில்லாத பிரச்சினையைப் பண்ண வேண்டாம். யாருக்கு என்ன கேள்வி கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும் உட்காருங்க" என்று கூறி அவரை அமர வைத்தார்.

வேலுமுருகன் vs துரைமுருகன்

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் வேல்முருகன், அமைச்சர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

"அமைச்சர்கள் வீட்டுக்குப் போனால் எனக்குச் சோறு போட்டு, டீ தான் கொடுக்கிறார்கள், கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை" என்று பேசியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "நீங்கள் பேரவைக்குள் பேசும்போது கூட்டணியில் இருக்கிறேன் என்கிறீர்கள், ஆனால், பேரவைக்கு வெளியில் பேசும்போது எங்களுக்கு எதிராகப் பேசுகிறீர்கள். கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா? வேல்முருகன் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

அதற்கு வேல்முருகன், "சென்சிட்டிவாக நான் பேசும்போது, நகைச்சுவையாகப் பேசி எனது கோரிக்கைகளின் வீரியத்தைத் துரைமுருகன் குறைத்து விடுகிறார். எதிரணியில் இருந்தபோது கூட கருணாநிதி என் கோரிக்கையை நிறைவேற்றினார். தற்போது கூட்டணியில் இருந்து பயனில்லை" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே, இன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.