தமிழ்நாடு

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி

”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி
Urban Development Minister K.N. Nehru Defends Tamil Nadu's Tax Policy
கோவை: காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்மொழி பூங்கா பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுரைப்படி, பூங்காவைப் பார்வையிட வந்ததாகத் தெரிவித்தார்.

“பூங்கா பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக, ஆணையர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். முதல்வரின் அனுமதியைப் பெற்று, அந்த நிதியைக் கொடுத்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எஸ்.புரத்தில் 2.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி, மற்றும் 1.96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்போம். உக்கடம் பேருந்து நிலையமானது 21.55 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. மேலும், குனியமுத்தூர் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் ஆய்வு செய்வோம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனை:

தொடர்ந்து பேசிய அமைச்சர், “வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க, 69.20 கோடி ரூபாய் மதிப்பில் பயோமெட்ரிக் முறையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படும். அதேபோல், கோவையில் 250 கோடி ரூபாய் மதிப்பில் கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் திட்டமும் தொடங்க உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை மின்சாரமாக மாற்றி மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கும். மீதமுள்ள மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கிவிட்டோம். அடுத்தபடியாக, கோவை மற்றும் மதுரையில் இத்திட்டம் தொடங்கப்படும்” என்றார்.

பாதாள சாக்கடை திட்டம்:

“திருச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகள் முடிய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான சவால்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்புகள் வழங்குவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளன. இருப்பினும், 6 மாதங்களுக்குள் பணிகள் முடிவடையும்” என்று அவர் குறிப்பிட்டார்.

வரிவிதிப்பு உயர்வு குறித்து கேள்வி

கோவை மாவட்டத்தில் வரிவிதிப்பு அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு, “யாருக்கு அதிகம் உள்ளது? யாருக்குத் தவறு நடந்துள்ளது? என உரிய முறையில் கூறுங்கள், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான். ஒவ்வொரு முறையும் வரிவிதிப்பு பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக சட்டம் இயற்றியுள்ளோம்.

600 சதுர அடிக்கு கீழ் உள்ள ஏழைகளின் இடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. 600 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் மேலும் வரி விதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். குப்பை வரி, சொத்து வரி கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு இல்லை. 2400 சதுர அடி நிலத்தில் 1200 சதுர அடி கட்டிடம் கட்டினால், மீதமுள்ள இடங்களுக்கு வரி போடாமல் இருக்க முடியுமா? அதுபோன்ற இடங்களை ட்ரோன் சர்வே மூலம் கண்டறியப்பட்டபோது, அதனையும் முதல்வர் எடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். வரியும் எங்கும் உயர்த்தப்படவில்லை. அப்படி ஏதாவது குறிப்பிட்டுச் சொன்னால் திருத்திக் கொள்ளலாம்” என்றார் அமைச்சர் கே.என்.நேரு.