தமிழ்நாடு

மாட்டு கொட்டகை தகராறில் பெண் வெட்டி கொலை.. அரிவாளுடன் சரணடைந்த குற்றவாளி

கோவையில் மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டு கொட்டகை தகராறில் பெண் வெட்டி கொலை.. அரிவாளுடன் சரணடைந்த குற்றவாளி
மாட்டு கொட்டகை தகராறில் பெண் வெட்டி கொலை.. அரிவாளுடன் சரணடைந்த குற்றவாளி
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பீடம்பள்ளி கள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் தனது தந்தை பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், ராஜேந்திரன் தனது வீட்டருகே உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரம்யாவுக்கு நாய்கள் வளர்ப்பதற்காக வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த 45 நாட்களாக அங்கு தங்கியிருந்த ரம்யாவைப் பார்க்க அவ்வப்போது ஆட்டோவில் சிலர் வருவது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை. இதனால், கொட்டகையை காலி செய்யுமாறு ரம்யாவிடம் கூறிய அவர், இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். நேற்று மாலை, வழக்கம் போல் ரம்யாவைப் பார்க்க சிலர் ஆட்டோவில் வந்தபோது, அவர்களை உள்ளே விடாமல் ராஜேந்திரன் தடுத்துள்ளார்.

அரிவாள் வெட்டில் முடிந்த மோதல்

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்த ராஜேந்திரன், ரம்யாவின் கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார். கொலை செய்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மாட்டு கொட்டகை தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.