தொழில்நுட்பம்

ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.

ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!
Mahindra Gears Up to Unveil 4 New SUVs and Pickups on Independence Day
ஸ்கார்பியோ, தார், போலேரோ நியோ, XUV 3XO, எலக்ட்ரிக் வாகனமான XEV 9e, BE 6 என தனது தயாரிப்புகளின் மூலம் இந்தியாவின் கார் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா நிறுவனம், கார் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றினை அளித்துள்ளது.

சுதந்திரத் தினத்தினை முன்னிட்டு இந்நிறுவனம் தனது நான்கு புதிய மாடல்களான Vision T, Vision S, Vision X, மற்றும் Vision SXT-ஐ மும்பையில் நடைப்பெறும் நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒரே நேரத்தில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்துவதால் SUV மற்றும் பிக்கப் டிரக் சந்தைகளில் மஹிந்திராவின் மதிப்பு பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாடல்கள் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்:

4 மாடல்களை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவிப்பிற்காக டீசர் ஒன்றினை வெளியிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். டீசரில் இடம்பெற்ற அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாடலும் இப்படிதான் இருக்கும் என இணையத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு-



1.மஹிந்திரா Vision X :

மஹிந்திரா விஷன் எக்ஸ், XUV வரிசையில் ஒரு புதிய மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மாடலில் அலாய் வீல்களில் புதிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான தோற்றத்துக்காக பிளாஸ்டிக் உறை பூசப்பட்ட வீல் ஆர்ச்சுகள் மற்றும் "Vision X" என்ற பிராண்டுடன் இணைந்த டெயில் லேம்ப் போன்ற தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

2.மஹிந்திரா Vision T:

பிரபலமான தார் வரிசையுடன் தொடர்புடைய Vision T மாடலானது, தார் வாகனத்தின் திறனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் எளிதாக ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செங்குத்தான டெயில் லேம்பு அம்சத்துடன் எக்ஸ்ட்ரா சக்கரம் பின்னோக்கி பொருத்தப்பட்டிருக்கும் (பாரம்பரிய SUV-களின் அடையாளம்) என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

3.மஹிந்திரா Vision SXT:

Vision SXT, கடினமான வேலைகளுக்காக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. Scorpio N அடிப்படையிலான Pik up வாகனமாக இந்த மாடல் இருக்க வாய்ப்புள்ளது.

4.மஹிந்திரா Vision S:

Scorpio குடும்பத்தின் ஒரு பகுதியாக, Vision S மாடல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலைப் பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை போல் தெரிகிறது.

மேலே குறிப்பிட்ட அம்சங்கள் எல்லாம் ஒருவிதமான யூகங்கள் தான். நாளை மதியம் 12 மணிக்கு 4 மாடல்கள் குறித்த முழு அறிவிப்பையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட உள்ளது. காரின் சிறப்பம்சங்கள், அதன் விலை குறித்த தகவல்களை அறிய கார் பிரியர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 83,691 கார்களை (எல்லா மாடல்களிலும் சேர்த்து) விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மாருதி சூசுகி நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மஹிந்திரா நிறுவனம் அதிக கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.