தொழில்நுட்பம்

என்ன பாஸ் சொல்றீங்க.. ரோபோ மூலம் குழந்தையா?

உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

என்ன பாஸ் சொல்றீங்க.. ரோபோ மூலம் குழந்தையா?
world's first humanoid surrogate robot designed to carry and deliver a baby
உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு சதவீதம் (Birth Rate) மற்றும் பெண்கள் கருத்தரிப்பு விகிதம் (Fertility Rate) என்பது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2024ம் ஆண்டில் உலகளவில் குழந்தை பிறப்பு விகிதம் 17.30 ஆக இருந்த நிலையில், 2025ம் ஆண்டில் 17.13 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் வரிசையில் இந்தியாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு திருமணம், குடும்பம் குறித்த பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், மிக முக்கிய காரணமாக கருதப்படுவது ஆண்கள் மற்றும் பெண்களிடையேயான உடல்நலப் பிரச்னைகள் தான்.

கர்ப்பப்பை குழாய்களில் அடைப்பு மற்றும் சேதம் ஏற்படுதல், ஆரோக்கியமற்ற வாழ்கைமுறை, கர்ப்பப்பையில் தரமற்ற அல்லது குறைவான எண்ணிக்கையில் கருமுட்டை உருவாகுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் கருவுறாமல் அவதிப்படுகின்றன.

செயற்கையான கருப்பை தொழில்நுட்பம்:

இந்நிலையில் தான் செயற்கையான கருப்பையில் குழந்தையினை ஈன்றெடுக்கும் தொழில்நுட்பத்தில் தீவிரமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் விஞ்ஞானிகள். இதுக்குறித்து டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-

ரோபோவில் செயற்கையான கருப்பை உருவாக்கப்படுகிறது. கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும்.அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும்.

சீனாவின் குவாங்சோ நகரில் உள்ள கைவா டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நிறுவிய டாக்டர் ஜாங் கிஃபெங், இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே இறுதி கட்ட நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவர் சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை வளர்ச்சி அடையும் காலம் முழுவதும், ரோபோவின் கருப்பைக்குள் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு, கருப்பை போன்ற சூழலை உருவாக்க செயற்கை அம்னியோடிக் திரவமானது கருப்பையினை சூழ்ந்திருக்கும்.

இருப்பினும், முட்டை மற்றும் விந்தணு எவ்வாறு கருத்தரிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிடவில்லை.

பயோபேக் ஆராய்ச்சின் நீட்சி:

இந்த முறையானது முற்றிலும் புதியது அல்ல என தெரிவிக்கும் டாக்டர் ஜாங், ”கடந்த காலங்களில் விஞ்ஞானிகள், "பயோபேக்" எனப்படும் ஒரு செயற்கை கருப்பை உதவியுடன் ஆட்டுக்குட்டியை ஈன்றதன் தொடர் ஆய்வுகள் அடிப்படையில் தான் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

சில மருத்துவ நிபுணர்கள், இந்த தொழில்நுட்பம் மனித முறையிலான கர்ப்பத்தை முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். தாய்வழி ஹார்மோன் சுரப்பு போன்ற சிக்கலான உயிரியல் செயல்முறைகளை அறிவியல் மூலம் நகலெடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பம் வெற்றிப்பெற்றால், இனப்பெருக்க அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகளவில் தற்போது சுமார் 15 சதவீத தம்பதிகள் கருவுறாமை சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் வாயிலாக தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு சுமார் £10,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12.96 லட்சம்) விலையில் இந்த ரோபோவின் மாதிரி விற்பனைக்கு வர உள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஏற்கனவே சட்ட மற்றும் நெறிமுறை சார்ந்த விவாதங்களை உருவாக்கியுள்ள நிலையில், டாக்டர் ஜாங், குவாங்டாங் மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த தொழில்நுட்பத்திற்கான சட்ட வரைவுகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.