உலகம்

திருடப்போன இடத்தில் விபரீதம்.. உடலை வெட்டி சமைத்த மாஸ்டர் செஃப்

பிரான்ஸில் 69 வயதான பீட்சா சமையல்காரர் திருட சென்ற இடத்தில், ஒருவரை கொலை செய்த நிலையில் அவரது உடல் பாகங்களை வெட்டி சமைத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடப்போன இடத்தில் விபரீதம்.. உடலை வெட்டி சமைத்த மாஸ்டர் செஃப்
Shocking Crime in France
பிரான்ஸில் அமைந்துள்ள பிராஸ்க் (Brasc) என்கிற கிராமத்தில் 57 வயதான ஜார்ஜஸ் மெய்க்லர் என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீடு காடுகளுக்கு நடுவே தனித்து அமைந்துள்ளது.

இதற்கு மத்தியில், மெய்க்லரின் போனிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அவரது மகளுக்கு சென்றுள்ளது. அதில், ஒரு நண்பருடன் வெளிநாட்டுக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தன் தந்தையிடமிருந்து வரும் வழக்கமான குறுஞ்செய்தி போல் இது இல்லையே, என சந்தேகமடைந்த மெய்க்லரின் மகள் தனது தந்தையை அணுக முயன்றுள்ளார்.பதில் எதுவும் கிடைக்காத நிலையில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது கடந்த 2023 ஆண்டு பிப்ரவரி மாதம். மெய்க்லரின் வேனை, பிராஸ்க் கிராமத்திலிருந்து 24 மைல் தொலைவில் அமைந்துள்ள கேமரேஸில் உள்ள ஒரு கவுன்சில் கட்டிடத்திற்கு அருகில் போலீசார் கண்டுபிடித்தனர். வேனை சோதனையிட்ட போது இரத்தம் மற்றும் மனித உடல் பாக எச்சங்கள் அடங்கிய பை கண்டறியப்பட்டது.

வழக்கின் விசாரணை வேகமெடுத்த நிலையில், மெய்க்லரின் வேனை தற்போது வைத்திருக்கும் ஷைன்டர் மற்றும் கபூபஸ்ஸி என்பவரை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

பிலிப் ஷைன்டர், ஜார்ஜஸ் மெய்க்லரை கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை காய்கறிகளுடன் சேர்த்து சமைத்ததாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். உடல் துர்நாற்றத்தை மறைப்பதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.மீதமுள்ள உடல் பாகங்களான தலையையும், கைகளையும், கால்களையும் எரித்து அதன் சாம்பலை அப்புறப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கொலைச் சம்பவத்தில் ஷைன்டருக்கு உதவியதாக அவரது துணைவி நதாலி கபூபஸ்ஸி (45 வயது) மற்றும் சவக்குழி தோண்டும் தொழிலாளி லூப் பென்ராக்கியா (25 வயது) ஆகியோர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், நதாலி கபூபஸ்ஸி தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுக்கிறார்.

எதற்காக கொலை?

ஷைன்டர், மெய்க்லரின் தனிமையான வீட்டில் பணம் மற்றும் கஞ்சாவை திருட முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட முயன்ற போது மெய்க்லரை கட்டிப்போடப்பட்டு, வாயடைத்துள்ளார் ஷைண்ட்ர். எதிர்ப்பாராதவிதமாக மூச்சுத்திணறி மெய்க்லர் இறந்ததாக ஷைன்டர் கூறியுள்ளார். இந்தக் கொடூரக் குற்றத்திற்கு நான் தான் முழுப் பொறுப்பு என்றும், மது மற்றும் கஞ்சா போதையில் இந்த பைத்தியக்காரத்தனமான செயலைச் செய்ததாகவும் ஷைன்டர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

ஷைன்டர் மீது கடத்தல், மரணத்திற்கு வழிவகுத்தல், சடலத்தை மறைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 22 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.