உலகம்

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!
New Study Reveals Alarming Salinity Increase in Antarctic Waters
அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடலின் மேற்பரப்பு நீரானது நம்ப முடியாத அளவில் உவர்ப்பு தன்மைக்கொண்டதாக மாறி வருவது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் பொதுவாக பனி உருகும் போது உண்டாகும் நன்னீரானது, உப்பு தன்மை கொண்ட கடல் நீரின் உவர்ப்பு தன்மையினை குறைப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாக உவர்ப்புத் தன்மை அதிகரித்து வருவது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த உவர்ப்பு தன்மை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் SMOS செயற்கைக்கோள் தரவுகளும் கடல் நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

உவர்ப்புத்தன்மை: ஏன் கவலைக்குரியது?

பொதுவாக, அண்டார்டிக் கடலில் குளிர்ந்த, புதிய நீரானது- வெப்பமான மற்றும் உவர்ப்பான நீருக்கு மேலே ஒரு அடுக்காக பரவும். இந்த அமைப்பு ஆழமான வெப்பத்தை உட்புகாமல் தக்க வைத்து, கடல் பனிப்பாறை உருவாக வழிவகுக்கும். ஆனால், தற்போது மேற்பரப்பு நீர் உவர்ப்பாக மாறுவதால், இந்த அடுக்கு அமைப்பானது சீர்குலைந்துள்ளது. கடல், பனியை அடியில் இருந்து உருகச் செய்கிறது. மேலும், புதிய பனி உருவாகுவதையும் இது தடுக்கிறது.

என்ன பிரச்னை ஏற்படலாம்?

* உலகளாவிய காலநிலை தாக்கம்: இந்த உவர்ப்புத் தன்மை மாற்றங்கள் கடல் நீரோட்டங்களைச் சீர்குலைத்து, உலகளாவிய காலநிலை தன்மையினை மாற்றும் ஆற்றல் கொண்டுள்ளது.
* அதிவேக புவி வெப்பமயமாதல்: கடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால் புவி வெப்பமயமாதல் வேகமடையலாம்.
* அண்டார்டிக் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்: பெங்குவின் போன்ற அண்டார்டிக் பகுதி விலங்குகளின் வாழ்விடங்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அண்டார்டிகா பகுதியானது, நாம் எதிர்பார்த்ததை விட விரைவாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. நாம் வாழும் இந்த கிரகத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்வதற்கும், கணிப்பதற்கும் தொடர்ச்சியான செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கள கண்காணிப்புகள் மிகவும் அவசியம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அண்டார்டிகா பகுதியில் நிகழும் இந்த புதிரான மாற்றம் நமது பூமியின் எதிர்காலக் காலநிலை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆய்வு குறித்த முழு விவரங்களுக்கு: PNAS-Rising surface salinity and declining sea ice