சினிமா

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துருவ நட்சத்திரம் பட வெளியீட்டுக்கான மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Dhruva Natchathiram
நீண்ட ஆண்டுகளாக திரைக்கு வரக் காத்திருக்கும் நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு நிலுவையில் இருந்த நிதிப் பிரச்சினை காரணமாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் தொடர்ந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15-ஆம் தேதிக்குள் (இன்று) படத்தை வெளியிட அனுமதி அளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார். மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் வெளியிட முடியாவிட்டால் கால நீட்டிப்பு கோரலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேல்முறையீடு தள்ளுபடி

இந்த உத்தரவை எதிர்த்துப் புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மேல்முறையீட்டு வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜூலை 15 வரை அவகாசம்?

இதற்கிடையில், நீதிமன்றம் விதித்திருந்த இன்றைய கெடுவுக்குள் படத்தை வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டதால், ரிலீஸ் தேதிக்கான கால அவகாசத்தை வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இக்கோரிக்கை மீதான தீர்ப்பை வரும் ஜூன் 17-ஆம் தேதி வழங்குவதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்துள்ளார். இதனால் துருவ நட்சத்திரம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அடுத்த சில நாட்களில் உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.