இந்தியா

தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட 17 வயது மகன்.. ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

ராஜஸ்தானில் கணவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியை கொலை செய்து காரில் போட்டு எரித்து கொலை செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுத முதல் மனைவி கைது செய்யப்பட்டார்.

தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட 17 வயது மகன்.. ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூர சம்பவம்!
Rajasthan Murder
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம் சிங் சௌத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் கார் தீவிபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங், அவரது இரண்டாவது மனைவி சுர்கியான், தாயார் புசி தேவி மற்றும் மருமகள் மகிமா ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் காருக்குள் கண்டெடுக்கப்பட்டன. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது கார் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாகக் குடும்பத்தினர் கூறினர். ஆனால், விசாரணையின்போது ராம் சிங்கின் 17 வயது மகன், தனது தாய் அழுதுகொண்டிருந்தபோதும் எவ்வித பதற்றமும் இன்றி மிக அமைதியாகத் தேநீர் குடித்துக்கொண்டு அவளைத் தேற்றியுள்ளார். இந்த அமைதி காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நாடகத்தை உடைத்த தடயங்கள்

காவல் துறையினர் காரை ஆய்வு செய்தபோது இரு முக்கியத் தடயங்கள் சிக்கின. முதலாவதாக, காரின் முன் இருக்கைகளில் யாரும் இல்லை, உடல்கள் அனைத்தும் பின் இருக்கையிலேயே இருந்தன. இரண்டாவதாக, சுர்கியானின் உடலில் தீக்காயங்களுக்கு முன்னரே கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதனால் இது விபத்தல்ல, கொலை என்பதை உறுதி செய்த காவல் துறையினர், அந்த 17 வயது சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

கொலைக்கான பின்னணியும் குற்றச்சாட்டும்

அஜ்மீர் எஸ்பி ஹர்ஷ் வர்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, ராம் சிங்கின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் சொத்து மற்றும் வாரிசுரிமை தொடர்பாகப் பலத்த மோதல்கள் நிலவி வந்துள்ளன. ராம் சிங் தனது முதல் மனைவிக்குக் கொடுத்த அநீதியால் அவரது பிள்ளைகள் தந்தை மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், குடும்ப நிதியைக் கவனித்து வந்த மருமகள் மகிமாவும், இரண்டாவது மனைவி சுர்கியானும் சேர்ந்து சொத்துக்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடுவார்களோ என்ற பயமும் சில குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்துள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களாகச் சிறுவன் இக்கொலையைத் திட்டமிட்டுள்ளான். இதற்காகக் குற்றப் புலனாய்வு வெப் சீரிஸ்கள் மற்றும் கிரைம் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் போலீசாரிடம் இருந்து எப்படித் தப்புவது என்று அவன் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் நடந்த கொடூரம்

சம்பவத்தன்று இரவு ராம் சிங்கும் அவரது இரண்டாவது மனைவியும் தூங்கிய பிறகு, அதிகாலை 4 மணி அளவில் சிறுவன் கத்தியால் தனது தந்தையைக் குத்திக் கொலை செய்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு எழுந்த சுர்கியான் தடுக்க முயன்றபோது, சத்தம் கேட்டுச் சிறுவனின் தாய் (ராம் சிங்கின் முதல் மனைவி) மற்றும் அவரது சகோதரி ஆகியோரும் அறைக்குள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சுர்கியான், புசி தேவி, மகிமா ஆகிய மூவரையும் கொலை செய்துள்ளனர். பின்னர், தடயங்களை அழிப்பதற்காக உடல்களைக் காருக்குள் வைத்துத் தீ வைத்துள்ளனர். இந்த திட்டமிடப்பட்ட கொலை சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.