இந்தியா

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!
DK Shivakumar says - not to interfere in states administration
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது?

வனத்துறையினரின் கூற்றுப்படி, வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படும் 4 பேர் கொண்ட குழுவை வனத்துறையினர் அதிகாலை நேரத்தில் எதிர்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கியை காட்டியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிகள் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இதற்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் வேட்டையாடச் செல்லவில்லை என்றும், காணாமல் போன கால்நடைகளைத் தேடியே வனப்பகுதிக்குள் சென்றதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

‘அவர்கள் வேலையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்!’

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சொந்தப் பிரச்னைகள் இருக்கின்றன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் கண்ணியத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிரொலி:

3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கர்நாடக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், கர்நாடக அரசு அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.

மேலும், “இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும்” என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யும் கண்டனம்:

மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் விஜய்யும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. கர்நாடக வனத்துறையினர் அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதனால், காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்போது தமிழ்நாடு - கர்நாடக அரசுகளுக்கு இடையிலான முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. ஒருபுறம் மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளும் கவனம் பெற்றுள்ளன.

விசாரணை முடிவில், உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.