அரசியல்

"ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக கட்டண உயர்வு! ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி"

கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் கூட்டுறவுத் துறையின் சார்பில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில், கல்விக் கட்டணமாக 1,415 ரூபாய்தான் இதுவரை வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 10,415 ரூபாயாக பல மடங்கு கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாணவர்களையும், பெற்றோரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

2022ம் ஆண்டு 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அப்போதையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தனது தொகுதியான ஆத்தூர், சீவல்சரகு ஊராட்சியில், முதன்முதலாக கூட்டுறவுத் துறையின் சார்பில் கலை அறிவியல் கல்லூரியை தொடங்கிவைத்தார்.

முதல் இரண்டு ஆண்டுகள் தனியார் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டு அதில் இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் 14 வகையான இளநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், கல்விக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள், பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இதுகுறித்துப் பேசிய திண்டுக்கல் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நிரூபன், “கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆத்தூர் கூட்டுறவு கல்லூரியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டது. இங்கு தற்போது 2,500 மாணவ, மாணவிகள் படித்துவரும் நிலையில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளாக 1,415 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. நடப்பாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 10,415 ரூபாயாக கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 11,960 ரூபாய் வசூலிப்பதாக அறிவித்துள்ளனர். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மீண்டும் பழைய கட்டணத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். சுயநிதி கல்லூரியாக செயல்பட்டுவரும் இந்த கல்லூரியை அரசு உதவிபெறும் கல்லூரியாக மாற்ற வேண்டும்.

குறிப்பாக அரசு அறிவித்துள்ள அனைத்து சலுகைகளும் இங்குள்ள மாணவர்களுக்கும் கிடைக்க உதவவேண்டும். இதற்காக நாங்கள் போராடிவருகிறோம்" என்றார்.
ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் காங்கேயனிடம் பேசினோம் "ஐ.பெரியசாமி அமைச்சராக பதவி வகித்தபோது, தனது தொகுதியான ஆத்தூரில் வசதியில்லாத மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க முடியாத சூழலை புரிந்து, கூட்டுறவுத் துறை நிதியில் இந்தக் கல்லூரியை கொண்டுவந்தார். அங்கு குறைந்த கட்டணமாக 1,415 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. அதையும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.பெரியசாமியே அனைவருக்கும் செலுத்தி வந்தார். இந்த நிலையில் புதிய அரசு தற்போது கல்விக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இது கண்டிக்கதக்கது. இதனால் மாணவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள்' என்றார்.

இதன் உள் விபரமறிந்தவர்களிடம் பேசியபோது, "முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஐ.பெரியசாமிக்கும் பெரியகருப்பனுக்கும் இடையே துறை ஒதுக்கீடு செய்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. இதனால் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பன், ஆத்தூர் கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்தாண்டே ரூ.5,415ஆக கல்விக் கட்டணத்தை உயர்த்தினார். அது தேர்தல் நேரம் என்பதால் பிரச்னை வேண்டாம் என ஐ.பெரியசாமியும் அமைதியாக இருந்ததோடு, அனைவருக்குமான புதிய கட்டணத்தையும் கட்டி முடித்தார். இதை அறிந்த பெரியகருப்பன் மீண்டும் கூடுதலாக கட்டணத்தை உயர்த்தினார். மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இந்த விவகாரத்தை பார்த்துக்கொள்ளலாம் என ஐ.பெரியசாமி அமைதியாகிவிட்டார்.
ஆனால் இருவருக்குமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய ஆட்சி அமைந்துவிட்டது.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்த கல்லூரி பற்றியும், கட்டண உயர்வு குறித்தும் எந்த விபரமும் தெரியாது. இது முழுக்க முழுக்க தி.மு.க. உள்குத்து வேலை. இந்த கல்லூரிக்கு கல்வித்துறை அனுபவமோ, மேலாண்மை திறமையோ இல்லாதவரை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளனர். மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்களின் நிலைமை புரியாமல் கூட்டுறவு கல்லூரி செயல்படுவதால், இந்த கல்லூரி தொடங்கிய நோக்கமே திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. அரசு கலை அறிவியல் கல்லூரியில் தற்போதைய ஆண்டு கட்டணம் 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கூட்டுறவு கல்லூரியிலோ கலை அறிவியல் பாடத்திற்கு 10,415 வரை உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு பெரும்சுமை" என்றனர்.

கூட்டுறவு கல்லூரியின் நிர்வாக கடந்த அலுவலர் கணேசன், ஆண்டே கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது 5,415 ரூபாய், தற்போது மீண்டும் 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு 10,415 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டணம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையத்தின் மூலம்தான் உயர்த்தப்பட்டுள்ளது. முதலில் வாடகைக் கட்டணத்தில் கல்லூரி இயங்கியது. தற்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்குகிறது. சம்பளம், போக்குவரத்து செலவு போன்றவற்றின் காரணமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமைச்சரே மொத்தமாக கட்டணம் செலுத்தி வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கல்லூரி லாப நஷ்டம் குறித்தும் கேட்டார்கள், அதையும் கொடுத்துள்ளேன்" என்றார்.


அரசியல் விளையாட்டுகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது!