அரசியல்

விஜய் ரேடார்: அமைச்சர்களுக்கு ஷேடோ வாட்ச்..!

அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் பொருட்டு முதலமைச்சர் விஜய் உளவு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

விஜய் ரேடார்: அமைச்சர்களுக்கு ஷேடோ வாட்ச்..!
CM Vijay
தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் பொருட்டு முதலமைச்சர் விஜய் உளவு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களையும் தனித்தனியாகக் கண்காணிக்கும் நோக்கில், அதே எண்ணிக்கையிலான 34 சிறப்பு உளவாளிகளை முதலமைச்சர் விஜய் களம் இறக்கியுள்ளார். அமைச்சர்களின் அறைகளில் நடக்கும் விஷயங்கள், கோப்பு நகர்வுகள் என அனைத்தும் உடனுக்குடன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் ஏதேனும் தவறுகள் இருப்பதாகத் தெரிந்தால், முதலமைச்சரே நேரடியாகச் சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தொடர்புகொண்டு எச்சரித்து வருகிறார்.

தலைமைச் செயலகம் மட்டுமன்றி அமைச்சர்களின் வீடுகள், சொந்த ஊர்கள் என அனைத்து இடங்களிலும் உளவுத்துறை போலீஸார் தங்களின் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

'ஏ டு இசட்' ரிப்போர்ட்

சீனியர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முதல் ஜூனியர் அமைச்சர் ராஜீவ் வரை அனைவரின் அன்றாட செயல்பாடுகளையும் 'ஏ டு இசட்' வரை கண்காணித்து, முதலமைச்சரின் செயலாளர்களுக்கும் சி.எம். அலுவலகத்திற்கும் அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளில் ஒவ்வொரு பிரிவையும் கண்காணிக்க உதவி இயக்குநர்களை நியமிக்கும் பாணியையும், விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தில் தீவிரவாதிகளை ரகசியமாகப் பின்தொடரும் 12 பேர் கொண்ட குழுவின் உத்தியையும் ஒத்ததாக இச்செயல்பாடு அமைந்துள்ளது. இந்த ரகசிய ரிப்போர்ட்டுகளின் அடிப்படையிலேயே அமைச்சர்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஒழுங்குபடுத்தி வருகிறார்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலா

முதலமைச்சர் விஜய் தனது அரசியல் முன்னோடியாகக் குறிப்பிடும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தனது ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களைக் கண்காணிக்க இதேபோன்ற உளவு அமைப்பைப் பயன்படுத்தியுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே எம்.ஜி.ஆரைத் தனது வழிகாட்டியாக அடையாளப்படுத்திக் கொண்ட விஜய், தற்போது தனது அமைச்சரவை ஊழலின்றிச் செயல்படுவதை உறுதி செய்ய அதே 'எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை' கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.