விளையாட்டு

சமையல்காரர் புகாருக்கு ஷஷாங் சிங் விளக்கம்... என்ன சொன்னார்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

சமையல்காரர் புகாருக்கு ஷஷாங் சிங் விளக்கம்... என்ன சொன்னார்?
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் ஷஷாங் சிங் மற்றும் அவரது தந்தை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் சிங் ஆகியோர் மீது வீட்டில் பணியாற்றிய சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபாலைச் சேர்ந்த விபேந்திர சிங் தோமர் என்பவர், ஷஷாங் சிங்கின் வீட்டில் சமையல்காரராக பணியாற்றியதாகக் கூறி, தன்னை உடல்ரீதியாக தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி, தனது விருப்பத்திற்கு மாறாக வீட்டுக்குள் அடைத்து வைத்ததாக புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், போபாலில் உள்ள ரதிபாத் காவல் நிலைய போலீஸார் ஷஷாங் சிங் மற்றும் அவரது தந்தை சைலேஷ் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், தனது உடலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயங்களின் புகைப்படங்களையும் விபேந்திர சிங் தோமர் வெளியிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ஷஷாங் சிங், "அந்த நபர் கூறுவது போல் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. அவர் ஜூன் 25-ஆம் தேதி மாலை எங்கள் வீட்டிற்கு வந்தார். ஜூன் 28-ஆம் தேதி அங்கிருந்து சென்றுவிட்டார். மூன்று நாட்கள் மட்டுமே இருந்த ஒருவரை, பணயக் கைதியைப் போல சிறை வைத்திருந்தோம் என்று எப்படி கூற முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "எல்லா வகையான உணவுகளையும் சமைக்கத் தெரியும் என்று கூறியே அவர் வேலைக்கு வந்தார். ஆனால் பின்னர், தனக்கு சரியாக சமைக்கத் தெரியாது என்பதை அவரே ஒப்புக்கொண்டார். அப்படிப்பட்ட ஒருவரின் குற்றச்சாட்டை எப்படி நம்ப முடியும்?" என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய ஷஷாங் சிங், "எங்கள் வீட்டின் படுக்கையறைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் இருந்த தனிப்பட்ட அறைகளுக்குள் அனுமதியின்றி நுழைந்து, வீடியோக்கள் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார். எனது தந்தையின் நண்பரின் பரிந்துரையின்பேரில்தான் அவரை வேலைக்கு அமர்த்தினோம். வந்தவுடனேயே ரூ.20 ஆயிரம் முன்பணம் கேட்டார். சமையல் திருப்திகரமாக இருந்தால் சம்பளம் வழங்குவதாக கூறியிருந்தோம். ஆனால் அவரது நடத்தை சரியில்லாததால் வேலையை விட்டு செல்லுமாறு தெரிவித்தோம். அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் இந்தப் புகாரை அளித்துள்ளார்" என விளக்கம் அளித்தார்.

இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ள போலீஸார், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.